சிங்களத்தில் நிகழ்காலச் சொற்கள்
சிங்களத்தில் நிகழ்காலச் சொற்கள்
எந்த மொழியை நாம் எடுத்துக்கொண்டாலும் காலங்கள் எனப்படுபவை மிக முக்கியமானவை. காரணம் நாம் காலங்களைக் கருத்திற் கொண்டே எந்த மொழியிலும் கருத்துக்களை வெளியிடுகின்றோம். சுருக்கமாகச் சொல்லப்போனால் காலங்களைக் கருத்திற் கொண்டு கருத்துக்களை வெளியிடுதலே சரியாக மொழியைப் பயன்படுத்துவதற்கும், அதன் கருத்துக்களைச் சரியாக குறிப்பிடவும் உதவி நிற்கின்றன. அந்த வகையில் ஏனைய மொழிகளைப்போன்று சிங்கள மொழியில் காலங்கள் (Tenses) மிகத் தெளிவாக அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று நிகழ்காலம் (Present Tense). இப் பகுதியில் நாம் சிங்கள மொழியின் நிகழ்கால சொற்கள், அவற்றின் அமைப்பு மற்றும் பயன்பாடு பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1. நிகழ்காலம் என்றால் என்ன?
நிகழ்காலம் என்பது தற்போது நடைபெறும் செயலை அல்லது வழக்கமாக நடைபெறும் செயலை குறிக்கும் காலம் ஆகும். இந்த நிகழ்காலத்தை நான் உங்களிடம் முதலில் குறிப்பிடக் காரணம் நாம் அடிக்கடி பயன்படுத்தும் மற்றும் மிக முக்கியமான காலமாக இது காணப்படுகின்றது. இது பேச்சுச் சிங்களம் மாத்திரமன்றி எழுத்துச் சிங்களத்திற்கும் மிக முக்கியமானதாகும்.
பின்வரும் உதாரங்களை நோக்குங்கள்.
මම කනවා (Mama kanawa) – நான் சாப்பிடுகிறேன்
ඇය යනවා (Aya yanawa) – அவள் செல்கிறாள்
ඔහු කියනවා (Ohu kiyanawa) – அவன் பேசுகிறான்
2. சிங்கள நிகழ்கால வினைச்சொற்களின் அமைப்பு
சிங்களத்தில் நிகழ்கால வினைச்சொற்கள் பொதுவாக “–නවා (–nawa)-நவா” என்ற முடிவுடன் வரும். இதனை அவதானித்தே ஒரு சொல் என்ன கால அடிப்படையில் உள்ளது என்பதனை நாம் அறிந்து கொள்ள முடியும்.
வினைச்சொல் + නවා = நிகழ்காலம்
| அடிப்படைச் சொல் | நிகழ்காலச் சொல் | தமிழ் கருத்து |
|---|---|---|
| කන (kana) | කනවා | சாப்பிடுகிறான் |
| බොන (bona) | බොනවා | குடிக்கிறான் |
| යන (yana) | යනවා | செல்கிறான் |
| කරන (karana) | කරනවා | செய்கிறான் |
3. எண்ணிக்கைக்கேற்ப நிகழ்கால சொற்களில் ஏற்படும் மாற்றங்கள்
சிங்கள மொழியில் பல சமயங்களில் ஒரே வடிவத்திலான நிகழ்காலப் பதங்களே அனைத்திற்கும் பயன்படுத்தப்படும். உதாரணமாக நாம் ஒருமை மற்றும் பன்மைச் சொற்களை எடுத்துக்கொள்வோம். தமிழில் அவன் ஓடுகின்றான் என் ஒருமைப் பதத்திற்குப் பயன்படுத்துவோம். பன்மைப் பதத்தில் அவைகள் ஓடுகின்றன என பயன்படுத்துவோம். இதில் ஒன்றை கவனித்துப் பாருங்கள். ஒருமையில் ஓடுகின்றான் என வந்தது பன்மையில் ஓடுகின்றன என மாற்றம் அடைகின்றது. இது தமிழில் ஏற்படும் மாற்றம் ஆகும். ஆனால் சிங்களத்தில் இவ்வாறான மாற்றங்கள் வருவது மிக மிக அரிது ஆகும்.
எடுத்துக்காட்டாக
මම කරනවා – நான் செய்கிறேன்
අපි කරනවා – நாம் செய்கிறோம்
ඔහු කරනවා – அவன் செய்கிறான்
ඔවුන් කරනවා – அவர்கள் செய்கிறார்கள்
இங்கே “කරනවා” என்ற சொல் ஒருமை மற்றும் பன்மைப் பதங்களுக்கு ஒரேபோல பயன்படுத்தப்படுகிறது என்பதை அவதானித்துப் பாருங்கள்.
4. வழக்கமான செயல் மற்றும் இப்போது நடைபெறும் செயல்
பல மொழிகளில் இந்த அமைப்பு முறை காணப்படுகின்றது. சிங்களத்திலும் நிகழ்காலம் இரண்டு அர்த்தங்களில் பயன்படுகிறது:
இப்போது நடைபெறும் செயல்- அதாவது நான் தற்போது என்ன செய்து கொண்டு உள்ளேன் என்பதனை குறிப்பிடும் சொல்
මම පොත කියනවා – நான் புத்தகம் படிக்கிறேன்
வழக்கமான செயல்- அதாவது இது வழமையாக நடைபெறக்கூடிய ஒரு விடயம். காலையில் சூரியன் உதிப்பது, மாலையில் மறைவதைப் கோன்றது.
මම හැමදාම උදේට දුවනවා – நான் தினமும் காலை ஓடுகிறேன்
5. எதிர்மறை நிகழ்காலம்
எதிர்மறை வடிவம் பொதுவாக “නෑ (nae)” என்ற சொல்லை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. “නෑ (nae)” என்றால் இல்லை என்று அர்த்தம்.
உதாரணம்:
මම කන්නේ නෑ – நான் சாப்பிடவில்லை
ඔහු යන්නේ නෑ – அவன் போகவில்லை
6. பேசும் மொழி மற்றும் எழுத்து மொழி
சிங்களத்தில் பேசும் மொழி மற்றும் எழுத்து மொழியில் சிறிய வேறுபாடுகள் இருக்கும். பேச்சு வழக்கில் சில சொற்கள் சுருக்கமாக பயன்படுத்தப்படலாம். ஆனாலும் இரண்டு வழமைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதே ஆகும்.
சிங்கள மொழியின் நிகழ்கால வடிவம் மிகவும் எளிமையான அமைப்பைக் கொண்டது. “–නවා” நவா என்ற முடிவு முக்கிய அடையாளமாகும். தமிழ் பேசுபவர்கள் சிங்களத்தை கற்க விரும்பினால், முதலில் நிகழ்கால வினைச்சொற்களைப் புரிந்துகொள்வது மிகவும் உதவியாக இருக்கும்.
Comments
Post a Comment