சிங்கள மொழி எப்படிக் கற்க வேண்டும்?
சிங்கள
மொழி எப்படிக் கற்க வேண்டும்?
சிங்கள மொழி
என்றால் என்ன?
சிங்கள மொழி என்பது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் மொழியாகும். வங்காள மொழி, பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டதும் மலையாள மொழியின் அசைவு நுட்பங்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டதுமான ஓர் மொழியாகும். இது தமிழ் மொழியுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. காரணம் தமிழ் மொழியின் பல சொற்கள் சிங்கள மொழியில் அப்படியே உருமாற்றம் பெறாது பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக அம்மா என்றால் சிங்கள மொழியிலும் அம்மா என்றே அழைக்கின்றனர். அக்கா என்றால் சிங்கள மொழியிலும் அக்கா என்றே அழைக்கின்றனர். எனவே சிங்கள மொழி என்பது கற்க அல்லது புரிந்துகொள்ள கடினமான ஓர் மொழி அல்ல. அதிலும் குறிப்பாக தமிழ் மொழி தெரிந்த எமக்கு சிங்கள மொழி கற்பது மிக மிக இலகுவான காரியம் ஆகும்.
சிங்கள
மொழி கற்பதால் ஏற்படும் பயன்கள்.
ஓர்
விடயத்தை நாம் கற்றுக்கொள்ள ஏதோ காரணம் காணப்படும். குறிப்பாக அது எமக்கு ஏதோ ஒரு வகையில்
உதவுகின்றதாக இருப்பதாலேயே நாம் கற்றலை மேற்கொள்கின்றோம். உதாரணமாக நாம் முகாமைத்துவம்
தொடர்பாக கற்கின்றோம் என வைத்துக்கொள்ளுங்கள். முகாமைத்துவம் சார்ந்த திறன்களை ஏதோ
ஓர் இடத்தில் நாம் பிரயோகிக்க வேண்டும் என்ற ஓர் அவசியத்தை மனதில் நிலை நிறுத்தியே
முகாமைத்துவக் கற்கையை நாம் மேற்கொள்ளுவோம்.
அந்த வகையில் சிங்கள மொழி கற்பதால்
ஏற்படும் பயன்கள் என நாம் பலவற்றைக் குறிப்பிடலாம். அடிப்படையாக சிங்கள மக்களுடன் ஓர்
நல்லுறவைப் இதனூடாகப் பேண முடியும்.
சமூக ஊடகங்கள் மற்றம் முதன்மைத் தகவல் வளங்களின்
ஊடாக வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை அலசி ஆராய முடியும். குறிப்பாக இன்னுமோர்
மொழிபெயர்ப்பாளரால் அல்லது மொழிபெயர்ப்பு ஊடகத்தால் மொழிபெயர்க்கப்படும் செய்திகளைத்
தவிர்த்து நாமே செய்திகளின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.
நீங்கள் பணி புரியும் வேலைத்தளங்களில்
பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் போன்றவற்றை இலகுவாக பெறுவதற்குச் சிங்கள மொழி ஓர்
உறுதுணையாக விளங்கி நிற்கின்றது.
கடந்த காலங்களில் வெளியாகிய மற்றும்
தற்போது வெளியாகும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான அறிவித்தல்களைக் கவனித்துப் பாருங்கள்.
அதில் இரு மொழி பற்றிய கருத்துக்கள் வினவப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். அதற்காக முன்னுரிமை
வழங்கப்பட்டிருப்பதையும் நீங்கள் அவதானித்திருக்கலாம். உதாரணமாக “தமிழ் மற்றும்
சிங்கள மொழி தெரிந்திருத்தல் சிறப்பானது” என்றவாறான அறிவித்தல்கள் வேலைவாய்ப்பு
தொடர்பான அரச மற்றும் தனியார் நிறுவன அறிவித்தல்களில் காணப்படும். குறிப்பாக மொழிபெயர்ப்பாளர்
பதவி, நிறுவன வரவேற்பாளர் பதவி, முகாமைத்துவம் சார் பதவிகள் மற்றும் கள ஆய்வு தொடர்பான
பல்வேறுபட்ட பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்களில் இது வினவப்பட்டிருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.
ஓர் பயணத்தை சிறப்பானதாக மாற்ற சிங்கள
மொழி உதவி புரிகின்றது. உதாரணமாக வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு செல்வதாக வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த பயணத்தை நீங்கள் தமிழ் மொழி தெரிந்திருந்தாலேயே பயணித்துக் கொள்ள முடியும். ஆயினும்
சிங்கள மொழி தெரிந்திருந்தால் மிக இலகுவாக பயணத்தை மேற்கொள்ளவும், பயணத்தில் எமது தேவைகளை
சரியாக வெளிப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
அரச மற்றும் தனியார் வேலைத்தளங்களில்
சேவைகள் மற்றும் பலன்களைப் பெற்றுக்கொள்ள சிங்கள மொழி உதவி நிற்கின்றது. உதாரணமாக நீங்கள் காலியில் உள்ள ஓர் பிரதேச செயலகத்திற்கு ஓர் சேவையைப்
பெற செல்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம். அங்கே மிக இலகுவாகச் சேவையைப் பெறுவதற்கு
சிங்கள மொழி உதவி புரிகின்றது.
சிலர் சிந்திப்பது எவ்வாறு எனின் சிங்கள
மொழிபேசத் தெரிந்தால் மட்டும் போதுமானது என்பதாகும். சிங்கள மொழி பேசத்தெரிந்திருத்தல்
மட்டும் போதுமான மேலதிக திறனாக கருதப்பட மாட்டாது. காரணம் எந்தக் கற்கை நெறி அல்லது
பயிற்சி ஆயினும் அது தொடர்பான காகித சான்றிதழ் எமது திறனை உறுதிப்படுத்த மிக மிக முக்கியமானது.
சிங்கள மொழியைப் பொறுத்தவரை நீங்கள் கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் இரண்டாம்
மொழி சிங்களத்தில் சித்தி பெறுவதே போதுமானதான அடிப்படைத் தகைமையாக கொள்ளப்படும். எனவே
அதனை பெற்றுக்கொள்வதற்கு எழுத்துக்கள், இலக்கணம் என்பவை மிகுந்த உதவி புரிகின்றன. எனவே
வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதில் முன்னிலை வகிக்க உதவி நிற்கின்றது.
சிங்கள மொழி
கற்றல் கற்பித்தலில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள்.
சிங்களம் எனப்படுவது ஓர் மொழி. எமது கருத்துக்களை
ஒரு நபருக்கு எடுத்துச் சொல்லும் ஓர் ஊடகமாகும். பல நபர்கள் தமது சொந்த மொழி மீது கொண்ட
பற்றினால் பிற மொழிகளையோ அல்லது பிற கலாச்சாரங்களையோ புரிந்து கொள்வதனையோ அல்லது அதனைப்பற்றிக்
கற்பதையோ விரும்புவதில்லை. இந்தக் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம்
ஓர் மொழி எனப்படுவது ஓர் பிரமாண்ட ஆற்றல். ஓர் நாகரிகத்தன் வளர்ச்சி மற்றும் தோற்றத்துடன்
ஓர் மொழி அளப்பரிய பங்கு வகிக்கின்றது. அது மற்றய மனிதரிடம் நாம் நேரடியாக கலந்துரையாடி
எமது கருத்துக்களை அவர்களுக்கு தெரிவிக்க உதவி நிற்கின்றது. அப்பேற்பட்ட பேராற்றல்
உள்ள மொழியைக் கற்க மறுப்பது எமது வெற்றிச் சந்தர்ப்பங்களை நாமே தடுப்பதற்கு சமமாகும்.
வரலாற்றை எடுத்துக்கொள்ளுங்கள். பன்மொழி
வித்தகர்கள் உலகையே தமது மொழி ஆற்றலினால் தம்வசப்படுத்தியுள்ளனர். நாம் வேறு எங்கும்
செல்லத்தேவையில்லை. அயல் நாடான இந்தியாவில் உள்ள மஹ்மூத்
அக்ரம் என்பவரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
தனது பத்தொன்பது வயதில் கிட்டத்தட்ட நாற்பத்தாறு மொழிகளில் சரளமாகப் பேசவும், நானூறு
மொழிகளிற்கு மேல் எழுதவும், வாசிக்கவும், தட்டச்சுச் செய்யக்கூடியவராகவும் இருந்தார்.
நம்மில்
பலர் இவரைப்பற்றி கேள்விப்பட்டவுடன் “இவர் அசாத்திய திறமை கொண்டவர். நாம் சாதாரணமான
நபர்கள். எம்மால் எப்படி இவ்வாறாக பன்மொழியைப் பயன்படுத்தி பேசவும், எழுதவும், தட்டச்சுச்
செய்யவும் முடியும்?” என எண்ணிக்கொள்ளக்கூடும். இந்த எண்ணம் முற்றிலும் தவறானது.
காரணம் எம்மாலும் முடியும். நாமும் சாதனைகள் புரிய முடியும். எம்மால் நாற்பத்தாறு மொழிகளில்
பேசமுடியாவிட்டாலும் கூட எமது நாட்டில் உள்ள ஓர் பிரதான மொழியாகிய சிங்கள மொழியையாவது
பேசவும், எழுதவும், வாசிக்கவும் தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியமானது அல்லவா?.
சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். இது எமக்கான ஓர் கேடயம் போன்றது. ஆம் சிங்கள மொழி
இலங்கையைப் பொறுத்தவரை தமிழ்மொழி பேசும் எமக்கு ஓர் கேடயம் போன்றது. காரணம் பல்வேறுபட்ட
சமூக, அரசியல் காரணிகள் மக்களிடையே குழப்பம் மற்றும் தெளிவின்மையை ஏற்படக் காரணம் மொழிப்புரிந்துணர்வின்மை
மற்றும் கருத்துத் தெரிவிக்கும் முறை புரியாமையே ஆகும். இவற்றை இல்லாதொளிக்க ஒரே ஒரு
சந்தர்ப்பம் எமக்கு உண்டு. அது யாதெனில் சிங்கள மொழியை நாம் பயில்வதாகும். பூரணமாக
பயிலாவிடினும் எமது தேவைக்காக பயன்படும் அளவிற்கேனும் பயில வேண்டும். அத்துடன் எமது
எதிர்கால சந்ததியையும் மொழியைக் கற்பதன் அவசியத்தை வலியுறுத்தி கற்பித்தலை ஊக்கப்படுத்த
வேண்டும். இதனூடாக சிங்கள மக்களிடையே எம்மால் நல்லுறவைப் பேணிப் பல பயன்களை நாம் அடைய
முடியும்.
இந்த நிலையில் சிங்கள மொழியை எவ்வாறு
கற்கலாம் என்ற ஓர் கேள்வி உங்களுக்கு ஏற்படலாம்.
காரணம் கடந்த பல காலமாக பாடசாலைகளில் கூட சிங்கள மொழியை கற்பிப்பதற்கு போதுமான ஆசிரியர்கள்
அற்ற நிலைமை தமிழ் மக்கள் அதிகம் செறிந்து வாழும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில்
காணப்படுகின்றது. சிங்கள மொழி தெரிந்த நபர்கள் கற்பிக்கத்தக்க திறனுடன் காணப்படுவதில்லை.
பாடசாலைகளிலும் கூட சிங்கள மொழி கற்பித்தலைப்பற்றிய ஓர் விழிப்புணர்வோ அல்லது ஊக்கமோ
மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுவது சற்றுக் குறைவாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக
சிங்கள மொழி கற்கும் ஆர்வம் உள்ள ஒரு மாணவன் கூட சிங்கள மொழி கற்க இயலாத சூழ்நிலையை
எதிர்நோக்கி பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்கின்றான்.
பாடசாலைக்
கல்வி பூர்த்தியான பின்னர் கல்லூரிக்கோ அல்லது இரண்டாம் நிலைக் கற்றல் நிலையங்களுக்கோ
சென்று தனது கல்வியைத் தொடர்ந்தாலுங்கூட அங்கும் சிங்கள மொழியைக் கற்க முடிவதில்லை.
இவ்வாறாக பல காலமாக தொடர்ந்த நிலைமையால் சிங்கள மொழியைப் பற்றிய புரிதல், கற்பதன் அவசியம்
மற்றும் கற்கும் ஆர்வம் அற்ற ஓர் சமூகம் உண்டாக்கப்படக்கூடிய ஓர் நிலை காணப்படுகின்றது.
தற்காலகட்டத்தில் சிங்கள மொழியைக் கற்கும் ஆர்வம் பல மக்களிடையேயும் குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே ஏற்பட்டாலும் கூட அதனை எங்கு கற்கலாம்?, எவ்வாறு கற்கலாம்? என்ற பல விடை தெரியாக் கேள்விகள் அதிகமாக எழுந்து கற்கும் ஆர்வத்தையே நசுக்கி விடுகின்றன. உதாரணமாக சிங்கள மொழி கற்ற ஓர் கற்றல் நிலையத்திற்குச் சென்றால் அதிக பணம் அறவிடப்படும் சூழல் பெரும்பாலாகக் காணப்படுகின்றது. அதைத்தவிர சுயமாக கற்றலை மேற்கொள்ளத்தக்க நூல்கள் மிக மிகக் குறைவாக காணப்படுகின்றது. இவ்வாறான பல சவால்களைக் கொண்டுள்ளது சிங்கள மொழிக்கற்கை.
சிங்கள
மொழி கற்பிக்கப்படும் விதம்
மொழி எனப்படுவது ஓர் கலை. அதனிலும்
குறிப்பாக சிங்கள மொழியை இசை அசைவு கொண்ட மொழி என்று குறிப்பிடுவர். நீங்கள் சிங்கள
மக்கள் உரையாடும் விதத்தை அவதானித்துப் பாருங்கள். ஓர் சந்தம், அசைவு, நளினம் பொருந்தியதாக
அந்த மொழி காணப்படும். எனவே சிங்கள மொழி ஓர் தாள நயத்துடன் கற்பிக்கப்படவேண்டிய ஓர்
மொழி.
நாம் சிங்கள மொழியை கற்க முனையும்போது
பலரும் குறிப்பிடும் ஓர் வசனம் “மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்” என்பதாகும். மனப்பாடம்
செய்து கொள்ள சிங்கள மொழி வாய்ப்பாடோ அல்லது கணிதக் கோட்பாடோ அல்ல. மாறாக இது ஒரு மொழி.
சில முக்கியமான வசனங்கள் மற்றும் சில விதிகளை மனனம் செய்து கொள்ளவேண்டுமே தவிர அனைத்தையும்
மனனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஒரு வசனத்தை கற்றால் அதனை கிட்டத்தட்ட
பத்து முறைகள் உச்சரித்தோ அல்லது பயன்படுத்தியோ பயிற்சி எடுத்துக் கொண்டீர்களாயின்
உங்களுக்கு இயல்பாகவே சிங்கள மொழி பரிச்சயமாகிவிடும். எனவே சிங்கள மொழியை மனனம் செய்வதை
நிறுத்துங்கள். அந்தச் சிந்தனையை அகற்றி விடுங்கள். நீங்கள் மனப்பாடம் செய்ய முற்படுவீர்களாயின்
அது வானின் எல்லையை அளப்பதற்கு ஒப்பானது ஆகும். ஆம், காரணம் மொழி எல்லையற்ற விடயம்
ஆகும். இது சிங்கள மொழியில் மாத்திரமல்ல, எந்த மொழியை நீங்கள் எடுத்துக்கொண்டாலும்
இது பொருந்தும். காரணம் மொழி எல்லையற்ற ஓர் ஆற்றல் ஆகும். அத்துடன் மொழி வளர்ச்சியடையக்
கூடியதாகும்.
சிங்கள மொழி கற்பவர்கள் சிங்கள மொழியை முதலில் சமூகத்தில் பயன்படுத்த ஆரம்பிப்பதே சிங்கள மொழி கற்பதின் முதல் படி. சமூகத்தில் பயன்பத்த முதன் முறை கூச்சமாகக் காணப்பட்டால் கண்ணாடி முன் நின்று பயிற்சி பெற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு சிறந்த பயனைத் தரும்.
Comments
Post a Comment